படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் சட்டத் திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும்போது படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. ஆனால் இது போன்ற பேருந்துகளை தமிழ்நாட்டில் பதிவு செய்யும் முறை இல்லை.
தற்போது இயங்கும் பேருந்துகள் அனைத்தும் வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவையாக உள்ளன. மேலும் இத்தகைய பேருந்துகளுக்கு வரிவிதிப்பதற்கான வழிவகை, 1974-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இயக்கு ஊர்திகள் வரிவித்திப்புச் சட்டத்தில் இல்லை.
எனவே, இதில் திருத்தம் செயவதற்கான, “தமிழ்நாடு இயக்கு ஊர்திகள் வரிவிதிப்பு (திருத்தச்) சட்ட மசோதாவை” போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் தாக்கல் செய்தார். இது சட்டமாக அமலுக்கு வருவதன் மூலம் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளையும், படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகளையும் இனி தமிழ்நாட்டில் பதிவு செய்ய முடியும்.
இப்படி பதிவு செய்யப்படும் ஆம்னி பேருந்துகளில் படுக்கை ஒன்றுக்கு மூன்று மாதகாலத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் வரிவிதிக்கப்பட இருப்பதாகவும், இருக்கை ஒன்றுக்கு மூன்று மாத காலத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்பட இருப்பதாகவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு 7 நாட்களுக்கான தற்காலிக உரிமை பெற்று தமிழ்நாட்டுக்குள் வரும் பேருந்துகளுக்கு இருக்கை ஒன்றுக்கு 800 ரூபாயும், படுக்கை ஒன்றுக்கு 1000 ரூபாய் வரி விதிக்கப்பட உள்ளது.
முப்பது நாட்களுக்கு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு இருக்கை ஒன்றுக்கு 2000 ரூபாயும், படுக்கை ஒன்றுக்கு 2500 ரூபாயும் விதிக்கப்பட உள்ளது. மூன்று மாதத்துக்கு உரிமம் பெற்ற பேருந்துகளுக்கு இருக்கை ஒன்றுக்கு 5000 ரூபாயும், படுக்கை ஒன்றுக்கு 5500 ரூபாயும் வரி விதிக்கப்பட உள்ளது.
வரும் 20ஆம் தேதி இந்த மசோதா பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பயணக் கட்டணமும் உயர வாய்ப்புள்ளது.