கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டியின் 1 ரூபாய் இட்லி கடையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
கோவை வடிவேலம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 80 வயதான இந்த பாட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி கடை நடத்தி வருகிறார். ஒரு இட்லி ஒரு ரூபாய் என விற்று தொழில் நடத்தி வரும் பாட்டி குறித்த செய்தி சமீபத்தில் வைரலானது.
பல செய்தி நிறுவனங்களும் கமலாத்தாள் பாட்டியை பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டனர். செய்திகளில் பேசியுள்ள பாட்டி, “ஒரு ரூபாய்க்கு கொடுப்பதில் லாப நஷ்டம் எல்லாம் பார்ப்பதில்லை. மக்கள் வயிறு நிறைய சாப்பிடும் சந்தோஷமே போதும்” என்றுள்ளார். பல நேரம் பசித்தவர்களுக்கு காசு வாங்காமல் இலவசமாக இட்லி செய்து தருகிறார் கமலாத்தாள் பாட்டி.
இந்தச் செய்தியை அறிந்த ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “கமலாத்தாள் போன்று ஒரு சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தும் பணியைச் செய்வோர் குறித்த கதைகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. இன்னமும் அவர் விறகு அடுப்பைப் பயன்படுத்துவதைக் கவனித்தேன். அவர் குறித்த விவரங்களை உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். அவரது கடைக்கு எல்பிஜி அடுப்பும் அவரது தொழிலில் முதலீடும் செய்யத் தயாராக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
WhatsApp us