இரு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஸ்வெஸ்டா நகரில் உள்ள கப்பல் கட்டுமான வளாகத்தை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உடன் பார்வையிட்டார். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு ரஷ்யா என்று பிரதமர் மோடி புகழ்ந்தார்.
ரஷ்யாவின் கிழக்கே வெகு தொலைவில் உள்ள மாகாணங்களுக்கான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கிழக்கத்திய பொருளாதார மன்றக் கூட்டத்தை அந்நாட்டு அரசு விளாடிவோஸ்டோக் நகரில் நாளை நடத்துகிறது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், இந்தியா – ரஷ்யா இடையேயான 20ஆவது உச்சிமாநாடும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். இன்று காலை விளாடிவோஸ்டோக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியின் பிரதமர் மோடியை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மோடி சந்தித்தார். பின்னர் ஸ்ஜிவெஸ்டா நகரில் உள்ள கப்பல் கட்டுமான வளாகத்தைப் பார்வையிட அவர்கள் புறப்பட்டனர். சிரித்துப் பேசிய வண்ணம் இருவரும் சுற்றுலா கப்பலை நோக்கி நடை போட்டனர்.தொடர்ந்து கப்பலில் பயணித்த அவர்கள், ஸ்வெஸ்டா கப்பல் கட்டுமான வளாகத்தை பார்வையிட்டனர். அந்த வளாகத்தின் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து விளாடிவோஸ்டோக் நகரில் இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, ரஷ்யாவின் அழைப்பு தனக்கு கிடைத்த மிகச்சிறந்த மரியாதை என்று கூறினார். ரஷ்யா தனக்கு உயரிய விருதை வழங்குவதாக அறிவித்து இருப்பது 130 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த கவுரவம் என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் இணைப்பிலேயே இருப்பதாகவும், எதுவானாலும் அவரிடம் பேசத் தயங்கியதில்லை எனவும் மோடி நட்பு பாராட்டினார்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அணு சக்தி தொடர்பு முனையங்கள், தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் சுமார் 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ தளவாடங்களை இருநாடுகளும் இணைந்து மிகக் குறைந்த விலையில் தயாரித்து விற்பது தொடர்பாகவும் பேசப்பட உள்ளது.
