உலக துப்பாக்கிச்சுடுதல் தொடரின் இறுதியில் 5 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது.
72 நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த யாஷஸ்வினி, அபிஷேக், இளவேனில் வாலறிவன் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர்.
இதனையடுத்து இந்த தொடரின் கடைசி நாளில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பக்கர் மற்றும் சவுரப் சவுத்ரியும், 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டியில் யாஷஸ்வினி தேஸ்வால் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் தங்கம் வென்றனர்.
இதன் மூலம் தொடரின் முடிவில் 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. மேலும் தொடரின் இறுதியில் 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு யாஷஸ்வினி தெஸ்வால், அன்ஜூம் மவுட்கில், அபுர்வி சண்டெல்லா, சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வர், ரஹி சர்னோபத், மனு பக்கர் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் தகுதி பெற்றனர்.