ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் புனிதத் தலங்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக ஊடுருவ சுமார் பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வரும் பாகிஸ்தான், 200 வீரர்களையும் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்த தயார் நிலையில் வைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு இந்திய படையினரின் கவனத்தைத் திசைதிருப்பி, சண்டையில் ஈடுபடச் செய்து, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வது வழக்கம். இந்நிலையில் உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி,பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சியளித்து வருகிறது.
இதற்கான புதிய தீவிரவாத முகாம்கள் எல்லை அருகே தோன்றியுள்ளன. கைபர் பாக் துங்க்வா மாகாணம் வழியாக இந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி புனித வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் தொடர தயார் நிலையில் உள்ளனர். இந்தியாவில் மதக்கலவரத்தைத் தூண்டிவிடவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லைக்கருகே உள்ள புனிதத் தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ரமிப்பு காஷ்மீர் எல்லையருகே இயங்கும் 18 தீவிரவாத முகாம்களை இந்திய வீரர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
