கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அம்மாநிலத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பல வாக்குச்சாவடிகள் வெள்ளத்தில் மிதப்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து 12 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். எர்ணாகுளம் ஜங்சன் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததுடன், தண்டவாளங்களும் நீரில் மூழ்கியதால் எர்ணாகுளத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
கேரளத்தில் வேறு பல இடங்களிலும் நீண்ட தூர ரயில்கள் நிறுத்தப்பட்டன. கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் திருச்சூர், பாலக்காடு மலப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
