சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன், மண்டபத்தில் தலா 18 செ.மீட்டரும், ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் தலா 17 செ.மீட்டரும், காரைக்கால், புதுக்கோட்டை, அரிமளம், அறந்தாங்கியில் தலா 11 செ.மீட்டரும், சேலம், மோகனூரில் தலா 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். மத்திய மேற்கு மற்றும் அதனை சுற்றி உள்ள தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று அவர் கூறினார். இதே நேரத்தில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுவதாக கூறிய அவர், இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றார்.
தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பரப்பில் சூறைக்காற்று வீசுவதாக பாலசந்திரன் கூறினார். இதனால் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
வருகிற 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று பாலசந்திரன் கூறினார். 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
சென்னை நகரை பொறுத்தவரை இரு தினங்களுக்கு மழை தொடரும் என்றார். கடந்த ஒன்றாம் தேதி முதல் இப்போது வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
