குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடுவின் தலைமை குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தாய் மொழி தொடர்பாக வெங்கய்யா நாயுடு உரை நிகழ்த்தினார். தங்கள் பிள்ளைகள் மம்மி, டாடி என்று அழைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புவதாகத் தெரிவித்த வெங்கய்யா நாயுடு, தாய் மொழி கண் போன்றது என்றும், பிற மொழிகள் மூக்கு கண்ணாடி போன்றது என்றும் சுட்டிக் காட்டினார்.
குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டு என்று தெரிவித்த அவர், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். மொழியை வலுக்கட்டாயமாக திணிக்கவும் கூடாது, அதே வேளையில் எதிர்க்கவும் கூடாது என்று குறிப்பிட்ட வெங்கய்யா நாயுடு, தாய் மொழியோடு சேர்த்து பிற மொழிகளையும் கற்றுக் கொண்டதால் தான் தாம் இந்த நிலைக்கு வந்திருப்பதாகக் கூறினார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக பேசிய வெங்கய்யா நாயுடு, அரசியல் சாசனம் மற்றும் தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றங்களில் தாய் மொழியில் வாதாட வேண்டும் என்று கருதுவதாக கூறிய வெங்கய்யா, உச்சநீதிமன்றத்தின் தென்னக அமர்வு சோதனை அடிப்படையில் சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
