தெலுங்கானா மாநிலத்திற்காக 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான புதிய திருப்பதி உருவாகி வருகிறது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதும் தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு கிடைத்ததால் அமராவதியை புதிய தலைநகராக உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டது.
இதே போன்று பிரசித்திபெற்ற ஏழுமலையான் கோவில் ஆந்திராவுக்கு போய்விட்டதால் புதிய திருப்பதியைக் கட்ட தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. புவனகிரி மாவட்டத்தில் லட்சுமி நரசிம்மர் குகை கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தூண்களில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் முகம் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகள் வரை சேதம் அடையாத வகையில் கிரானைட் கற்கள் ஆந்திராவின் குருஜாப்பள்ளி கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கோவில் வளாகம் தயாராகி வருகிறது.
திருப்பதியைப் போலவே யாதாகிரி குட்டா என்ற மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. ஏழு கோபுரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு கோவிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான மாஸ்டர் பிளானை திரைப்பட கலை இயக்குனர் ஆனந்த் சாய் மற்றும் சின்ன ஜீயர் சுவாமியின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தை சேர்ந்த சுமார் 500 சிற்பிகள் ஆகம வாஸ்து, பஞ்சார்த்த சாஸ்திரங்களின் படி சிற்பங்களை வடிவமைத்து வருகின்றனர்.
