நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முப்படைகளுக்கும் தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றார். மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதை அடுத்து செங்கோட்டை சென்ற அவருக்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். அதை மோடி ஏற்றுக் கொண்டார்.
அப்போது உரை நிகழ்த்திய நரேந்திர மோடி, தாய் மண்ணை விவசாயிகள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை 30 முதல் 40 விழுக்காடு வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பாதுகாப்புப் படையினர் தான் நமது பெருமை என்று கூறிய மோடி, படை பலத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் முப்படைகளுக்கு தலைவரை நியமிக்க உள்ளதாக அறிவித்தார். பாதுகாப்புத்துறையில் மிக உயரிய அதிகாரியாக அவர் இருப்பார் என்றும் மோடி தெரிவித்தார். சந்திரயான் 2 விண்கலம் நிலவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சிகரங்களை தொட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக அங்கு திரண்டிருந்த பள்ளி மாணவ மாணவிகளை சந்தித்த மோடி, அவர்களை உற்சாகப்படுத்தினார்.
