இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் காவிரியில் 9.5 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டது. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 8 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும்.
இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 9,900 கனஅடியாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, அங்கு பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 9,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 9,900 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், 120 அடி நீர்தேக்கும் அளவை கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 47.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 48.92 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை நெருங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
