கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 124.80 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 18 ஆயிரத்து 210 கனஅடி நீர்வரும் நிலையில், அணையிலிருந்து 24 ஆயிரத்து 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 84 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 83.23 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 962 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் நீர்வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு மொத்தம் 54,511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து 29,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 87 டிஎம்சி ஆக உள்ளது. கர்நாடகத்தில் இருந்து திறக்கப்பட்ட நீர் முழுமையாக மேட்டூர் அணைக்கு ஓரிரு நாட்களில் வந்துசேரும்போது அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
