கடந்த வாரத்தில் ஜி ஸ்கொயர், ரேவதி, லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவையில், ரேவதி, ஜி ஸ்கொயர், லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களோடு தொடர்புடைய 74 இடங்களில் கடந்த 29, 30, 31 ஆகிய நாட்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஆவணங்கள், கணக்கில் வராத நகை, பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கடந்த 6 நாட்களாக கணக்கிடுதல், மதிப்பிடுதல் மற்றும் ஆய்வு நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் அந்த பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
இந்நிலையில், 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் 433 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் கணக்கில் வராத பணம் 25 கோடி ரூபாய், தங்கம் 12 கிலோ, வைரம் 626 கேரட் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரி ஏய்ப்பு தொடர்பாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
