ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், அமித்ஷா என்றால் யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று புகழ்ந்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதியுள்ள “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் வெங்கய்யா நாயுடு தப்பித்தவறி அரசியலுக்கு வந்து விட்டதாகக் கூறினார். முழு ஆன்மிகவாதியான வெங்கய்யா நாயுடு எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டிய ரஜினிகாந்த், நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஆற்றிய உரை அற்புதமாக இருந்தது என்று புகழ்ந்தார். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் என்று தெரிவித்த ரஜினிகாந்த், ஆனால் யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும் என்று குறிப்பிட்டார்.
