நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த பனை மரம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. அருகிப் போன பனை மரங்கள் பெருக வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் குறித்து மாநில நிலத்தடி மற்றும் நீர் ஆதாரத் துறை மூலம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2018ம் ஆண்டு ஆகஸ்டு முதல் கடந்த மாதம் ஆகஸ்டு வரை, நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் நாகை, திருப்பூர், ராமநாதபுரம், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே கடந்த ஓராண்டில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரசரியாக 3 அடி முதல் 12 அடி வரை குறைந்துள்ளது.
இந்த நிலையில், நிலத்தடி நீரை உயர்தவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும் தமிழக அரசு நிதி நிலை அறிக்கையின் போது பனை மரம் வளர்க்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூபாய் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டு 2 கோடியே 50 லட்சம் விதைகள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதுமுள்ள தோட்டக்கலை பண்ணைகளில் விதைக்கப்பட்டன.
சல்லி வேர்களைக் கொண்ட பனை மரத்தை வீட்டுக்கு அருகில் நடுவதால், வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதோடு, மணல் அரிப்பையும் பனை மரங்கள் தடுக்கும் என்கின்றனர் தோட்டக் கலைத்துறை அதிகாரிகள்.
ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது என்கின்றனர். தனது சல்லி வேர்கள் மூலமாக அந்த பனை மரம் 1500 அடி ஆழம் வரை மழை நீரைக் கொண்டு செல்லும் சக்தி வாய்ந்தது.
ஒருகாலத்தில் தமிழகத்தின் நிறைந்து காணப்பட்ட பனை மரங்கள் அருகிப் போய்விட்ட நிலையில், தமிழகத்தின் மரமான பனையை பெருக்க வேண்டிய அவசியம் என்கின்றனர் தோட்டக் கலைத் துறையினர்.
விதை விதைத்த 6 முதல் 10 மாதங்களில் சிறு கன்றாக வரும் பனை, 5 அல்லது 10 ஆண்டுகளில் மரமாக வளர்ந்து, பல ஆண்டுகள் பயன் தரும் என்கின்றனர் தோட்டக் கலைத்துறையினர்.
பனையை இழந்தால் பாலை வனம் என்கிற முது மொழியை நினைவில் கொண்டு பொதுமக்களும் பனை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே தோட்டக் கலைத்துறையினரின் வேண்டுகோள்.
![](https://indsamachar.com/wp-content/uploads/2020/04/logo-2.png)