தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பதிவாகியுள்ளது என்றார்.
இன்று, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு பருவத்தில் 15 விழுக்காடு கூடுதல் மழைப் பொழிவை தமிழகம் பெற்றிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.
