டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்தித்து பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன் அதை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சாலைகளில் மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து பதற்றம் சற்று தணிந்து வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் நீக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் தரைவழி தொலைபேசி சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செல்போன், இன்டர்நெட் சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்தித்து பேசினார்.
