தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று மேலும் சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி, ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை 27 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமையும் சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்த, தங்கம் விலை ஒரு சவரன் 27 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றமின்றி தங்கம் விற்பனையானது. ஆனால் மீண்டும் திங்கட்கிழமை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்தது.
திங்களன்று ஒரு சவரன் 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத்தங்க விற்பனையிலேயே இவ்வளவு அதிக விலைக்கு தங்கம் விற்பனையாவது இதுவே முதல் முறை என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் உலகசந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை நடுத்தர மக்களை கவலைக்குள்ளாக்கியது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 27 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் நேற்றைய விலையிலிருந்து 27 ரூபாய் அதிகரித்து, மூவாயிரத்து 487 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ஒருகிராம் 45 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பார் வெள்ளி ஒரு கிலோ 100 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்திலிருந்து அதாவது 1ம் தேதி முதல் இன்று வரை ஆறே நாட்களுக்குள் தங்கம் விலை மொத்தமாக ஆயிரத்து 416 ரூபாய் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
