விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இவ்விழாவின் போது பல அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைத்து வழிபடுவது வழக்கம்.
அடுத்த மாதம் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதற்காக கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ராஜஸ்தான் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காகிதம் மற்றும் அட்டைக் கூழ், மாவு, தேங்காய் நார் கொண்டு சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் பாதிப்பில்லாத வகையில் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சிலைகளுக்கு பூசப்படும் வர்ணங்களும் எளிதில் நீரில் கரைந்து, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும் தன்மை உடையதாகும்.
பால விநாயகர், ராஜ கணபதி, மயில் விநாயகர், அன்னபட்சி விநாயகர், வெள்ளை விநாயகர் போன்ற விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 15 அடி வரை கண்களை பறிக்கும் வர்ணங்களில் ஜொலிக்கின்றன.
இந்த சிலைகள் 100 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த தாங்கள், பல்வேறு பகுதிகளிலும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலைகளை தயாரிப்பது மன நிறைவை அளிப்பதாக கூறுகிறார்கள் இந்த தொழிலாளர்கள்.
நாம் கொண்டாடும் பண்டிகைகள், புகலிடம் தேடி தமிழகம் வரும் வட மாநில தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தை அளிக்கிறது என்பதை மறுக்க முடியாது.