சென்னை போரூரில் யூடூ கால் டாக்சி சேவை நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 200 கார்கள் எரிந்து நாசமாகின. எரிவாயு சிலிண்டர் – டயர் வெடிப்பு, கரும்புகை, கடுமையான அனல் போன்ற சவால்களுக்கு மத்தியில் போராடி தீ அணைக்கப்பட்டது.
நுங்கம்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த கால்டாக்சி மற்றும் கார் வாடகை நிறுவனம் யூடூ. இந்நிறுவனத்தின் கார்கள், போரூர் டிரங்க் சாலையில் உள்ள பல ஏக்கர் பரப்பிலான இடத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை அன்று அங்கு 211 கார்கள் நின்று கொண்டிருந்தன. பிற்பகல் ஒன்றரை மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கார்களுக்குப் பரவியது.
சில கார்களில் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததால், அவை பலத்த சத்தத்துடன் வெடித்தன. டயர்களும் வெடித்து அச்சத்தைக் கிளப்பின.
எரிவாயு, பெட்ரோல், டீசல், மற்றும் டயர் எரிந்ததால் கரும்புகை சூழ்ந்து கொண்டது. சாலையில் புகை சூழ்ந்து, அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர்.
ராமச்சந்திரா மருத்துவமனையின் ஜன்னல்கள் மூடப்பட்டன.
தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. கடும் சவால்களுக்கு மத்தியில் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முடிவில் கணக்கெடுத்தபோது டட்சன், நிசான் சன்னி, எவாலியா, எட்டியாஸ் போன்ற 184 கார்கள் தீயில் கருகியது உறுதி செய்யப்பட்டது.
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
250 கார்களில் 39 கார்கள் வாடகைக்கு சென்று விட்டன. இதனால் அவை தப்பின. கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அதிக அளவில் காய்ந்த கோரைப்புற்கள் உள்ளன. இதற்கு முன்பு, அங்கு ஐந்து முறை தீவிபத்து ஏற்பட்டு உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
சமூக விரோதிகள் வேண்டுமென்றே தீவிபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நிறுவனத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேவையை நிறுத்தி விட்டு கார்களை அங்கேயே நிறுத்தி வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சமூக விரோதிகள் தீ வைத்தனரா? என்பது குறித்து கண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆராயப்படுகின்றன. இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
