தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் வனப்பகுதிகளில் பரவும் காட்டுத்தீயால், நூற்றுக்கணக்கான ஏக்கரில், அரியவகை மரங்கள், தாவரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன
சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில், கருங்காலி என்ற ஊர் அருகே உள்ள காட்டில், நேற்று முன்தினம் தீ பரவியது. இந்த தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், அருகில் உள்ள தேக்கம்பட்டி மற்றும் டேனிஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு காட்டுத் தீ பரவியது. வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் கடுமையாக போராடி வரும் நிலையில், 40 தனியார் வாகனங்கள் மூலம், தண்ணீர் எடுத்துவரப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்கிறது… இதனைப் பார்வையிட்ட, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, காட்டுத்தீக்கு காரணமாக இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேகமலை வனச்சரணாலய பகுதிகளில், பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது… சுருளிப்பட்டி காப்புக்காடு, நாராயணத்தேவன்பட்டி பீட், யானைக்கஜம் பகுதியில், நேற்று மாலை முதல் தீப்பிடித்து பரவி வருகிறது. நவீன தீயணைப்புக் கருவிகள் இல்லாததால் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே உப்புப்பாறை மேட்டில், காட்டுத்தீ பரவி வருகிறது. காற்றின் வேகத்தில், தீ பரவும் எல்லை விரிவடைந்து கொண்டே செல்வதால், இந்த காட்டுத்தீயில் சிக்கி, அரியவகை மரங்களும், மூலிகைச் செடிகளும் நாசமாகி வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அய்யூர் காப்புக்காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 30 ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ன. தீயிணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பல மணி நேர போரட்டத்திற்கு பின், காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தென்காசி அருகே, கேரளாவை ஒட்டிய ஆரியங்காவு வனப்பகுதியில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
