தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தின்போது வழங்கப்படும் முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தின்போது தமிழக அரசால் முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில், பொதுத்துறை, வீட்டு வசதி துறை பதிலுரையின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் 2 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட்ட உடன் முன்பணம் உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
இதன்மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
