விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
60 வயதை அடையும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் அளிக்கும் இத்திட்டத்திற்கு ‘பிரதான் மந்திரி கிஸான் மான்-தன் யோஜ்னா’ என்று பெயர்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் 2019-20 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே சுமார் 500 விவசாயிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் உருவாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 2 லட்சம் ஏக்கர் வரை விளைநிலம் வைத்துள்ள, 18 முதல் 40 வயதுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முடியும்.
இந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை விவசாயிகள் கட்ட வேண்டியிருக்கும். அதற்கு இணையான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத்தி வரும்.
ஓய்வுத் தேதிக்கு முன் ஒரு விவசாயி இறந்து விட்டால், அவருடைய மனைவி அதே திட்டத்தில் தொடர முடியும். இதை அவர் விரும்பாவிட்டால், அந்த விவசாயி அதுவரை கட்டிய முழுத் தொகையும் வட்டியுடன் அவருடைய மனைவிக்குக் கொடுக்கப்படும்.
Common Service Centres (CSCs) எனப்படும் பொதுச் சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.