சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் செய்முறை கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகம் முழுவதிலும் உள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 528 பேரூராட்சிப் பகுதிகளில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி துரிதப்படுத்தப்படவுள்ளது என்றார். 14 தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 34 குளங்களை புனரமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்று மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் மறுசுழற்சி வசதிகள் ஏர்படுத்த வேண்டும் என்றார்.
அவ்வாறு செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கழிவுநீர் மறுசுழற்சி வசதிகள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் எச்சரித்தார்.
நீர்நிலை ஆக்கிமிப்புகளை மீட்டெடுக்க எம்.பி, எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவினை செயல்படுத்த முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
