வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் கருவிகள் அனுப்பப்பட்டுவிட்டன.
வாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்காக தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
