அருண் ஜேட்லியின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் பாஜக தொண்டர்களுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் குறிப்பினை வெளியிட்டுள்ளார்.
இன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக காலமான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவரது இரங்கல் செய்தியில்…
மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரியை அறிமுகப் படுத்தியவர்! நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர்!
கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர் அருண்ஜேட்லி! அவரது மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
