கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இன்று சரஸ்வதி பூஜையையொட்டி, வீடுகளில் பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை வைத்து, அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை சரஸ்வதிக்கு படையலிட்டு வழிபடுகின்றனர்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதைப் போற்றும் வகையில், ஆயுத பூஜை நாளின் போது, தொழில் சம்மந்தமான கருவிகள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கு மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, பழம், பொரி, சுண்டல் ஆகியவற்றைப் படையலிட்டு வழிபடுகின்றனர். கடைகளிலும் அலுவலகங்களிலும் தங்கள் தொழில் சிறக்க இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.
வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், தீமையை நன்மை வெற்றி கொண்ட திருநாள் இது என்றும், துர்காதேவி ஆசிமழை பொழிந்து மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், துர்காஷ்டமியின் தெய்வமான மகாகவுரி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல் அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும் என்று கூறியுள்ளார்.