புதுச்சேரி ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அங்கு செயற்கையான மண் திட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி பகுதியில் 390 ஹெக்டேரும் தமிழகப் பகுதியில் 410 ஹெக்டேரும் என 800 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஊசுடு ஏரிக்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இதனால் இந்த ஏரியை இரு மாநில அரசுகளுமே பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளன.
மழை இல்லாததால் ஏரியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரின்றி குட்டை போல் காட்சி அளிக்கும் நிலையில் பறவைகள் தொடர்ந்து இங்கு வசிக்கும் விதமாக திட்டு போன்ற அமைப்புகளை உருவாக்க தனியார் அமைப்புகள் முன்வந்துள்ளன. ஐ.பி.எப். மற்றும் ஆரண்யம் பவுண்டேசன் அமைப்புகள் சார்பில் வனத்துறை அனுமதியுடன் செயற்கையான திட்டுகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் 3 ஹெக்டேர் பரப்பளவில் 9 திட்டுகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ஜே.சி.பி. மூலம் ஏரிக்குள்ளேயே பள்ளம் தோண்டி சுமார் 10 அடி உயரத்துக்கு மண்ணை கொட்டுகின்றனர். மண் எடுக்க தோண்டப்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கும். அந்த தண்ணீரை பறவைகள் பயன்படுத்த ஏதுவாக அமையும் என இந்தப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் கூறுகின்றனர்.
இந்த செயற்கை திட்டுகளில் மர வகைகளும் நடப்பட உள்ளன. இதனால் கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் பறவைகள் இங்கிருந்து வெளியேறி செல்வது தடுக்கப்படும். மேலும் ஊசுடு ஏரியில் தண்ணீர் தேங்கும்போது படகு சவாரி செய்பவர்கள் இந்த செயற்கை திட்டுகளை சுற்றி வந்து ரசிக்க கூடியதாக இருக்கும் என இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஏரி நிரம்பும் வகையில் போதுமான அளவு மழையையும் பறவைகளின் வரத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது ஊசுடு ஏரி
