நடிகர் விஷால் தனது நிறுவனப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறைக்கு முறையாக செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமினில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த செய்த டி.டி.எஸ். தொகை வருமான வரித்துறைக்கு செலுத்தப்படவில்லை என்றும் இது தொடர்பான வருமான வரித்துறை நோட்டீசுக்கு விஷால் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து விஷால் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் விஷால் ஆஜராகாத நிலையில், சம்மன் வந்து சேரவில்லை என விஷால் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், விஷால் நேரில் ஆஜராக விலக்களிக்கவும் கோரினார். இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் விஷாலுக்கு ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
