சென்னையில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான நிறுவனம் 5 ஆண்டுகளாக பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை செலுத்தவில்லை என்பதால் விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காததால் விஷாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை எழும்பூர் நீதிபதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு விஷால் ஆஜராகாததால் ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகும் அவர் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த 2 ஆம் தேதி விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் காலை 10 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கைது வாரண்டை திரும்ப பெற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மலர்மதி, பிற்பகல் ஒரு மணியளவில் விஷாலுக்கு எதிரான கைது வாரண்டை திரும்ப பெற்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த விருப்பமா அல்லது வருமானவரித்துறையிடம் சமரசமாக முடித்துக் கொள்ள விருப்பமா என்பது குறித்து விஷால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
