சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்த அருள்ராஜ் – நந்தினி தம்பதியர் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
இவர்களின் வீட்டில் பணிப்பெண்ணாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேர்ந்த அம்பிகா நேற்று மதியம் சிறுமியை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நந்தினி பணிப்பெண்ணிடம் சிறுமியை விட்டுவிட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பணிப்பெண் அம்பிகா மற்றும் சிறுமி இருவரையும் காணவில்லை என வீடு மற்றும், அருகில் உள்ள பகுதியிலும் தேடியுள்ளார். இதனை அடுத்து சில மணி நேரம் கழித்து பணிப்பெண் அம்பிகா மொபைல் போனிலிருந்து நந்தினிக்கு போன் வந்துள்ளது.
அதில், பேசிய பணிப்பெண் அம்பிகா, தன்னையும் சிறுமி அன்விகாவையும் யாரோ கடத்தி விட்டார்கள் எனவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறி போனை வைத்து விட்டார். இதனால் பதற்றமடைந்த நந்தினி தனது கணவருக்கு தகவல் கொடுத்து அவரையும் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அதே போனில் பேசிய ஒருவன், இருவரையும் உயிரோடு விட வேண்டும் என்றால் 60 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளான். இதனால் அச்சம் அடைந்த பெற்றோர் இருவரும் அமைந்தகரை காவல் நிலையத்தில் சிறுமி மற்றும் பணிப்பெண் கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து அமைந்தகரை போலீசார் அருகாமையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் பணிப்பெண் அம்பிகாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்து வந்தனர்.
அம்பிகாவின் செல்போனுக்கு தொடர்ச்சியாக மற்றொரு செல்போனில் இருந்து அழைப்பு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரைக் கொண்டு விசாரணை நடத்தியதில், அது முகமுது கரிமுல்லா சயீத் என்ற நபருடையது என்பது தெரியவந்தது.
நெற்குன்றம் அருகே பாலவாயல் என்ற இடத்தில் இருந்த அவனைப் பிடித்து முறையாக விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. புழலிலுள்ள கேஎப்சி நிறுவன கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்த கரிமுல்லா சயீத், தனது காதலி அம்பிகா உதவியுடன் வசதியான மருத்துவ தம்பதியரின் மகளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், சென்னையை அடுத்த கோவளத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அம்பிகாவையும் கைது செய்து, அங்கிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
மருத்துவ தம்பதியிடம் இருந்து பணத்தைப் பறிப்பதற்காக அம்பிகாவின் யோசனைப்படி இந்த கடத்தலை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தங்களது மகளை உடனடியாக மீட்டு ஒப்படைத்த காவல்துறையினருக்கு, மருத்துவர்களான அருள்ராஜ் – நந்தினி தம்பதியர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் சிறுமியை பாதுகாப்பாக மீட்ட தனிப்படை போலீசாருக்கு, காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தனர்.
சிறுமி கடத்தப்பட்டது முதல் விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இரவு 11 மணி வரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து ஆலோசனையில் ஈடுபட்டதுடன், சிறுமி மீட்கப்பட்ட பிறகே அங்கிருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
பணிப்பெண்ணையோ, வேலையாட்களையோ அவர்களது பின்னணி குறித்து முறையாக விசாரிக்காமல் வீட்டில் பணிக்கு அமர்த்தினால் எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
