குர்தாஸ்பூர் மாவட்டம் பட்டாலாவில் (Batala) குடியிருப்புகள் அமைந்த பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த ஆலை இயங்கி வந்தது. நேற்று மாலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில், 3 மாடி கட்டிடமும் தரை மட்டமானது. அருகில் இருந்த சில வீடுகளும் வெடிவிபத்தில் சேதமடைந்தன.
பலத்த வெடி சத்தத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள், போலீசாருடன் பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல் கருகிய நிலையில் 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாலும், கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுவதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.சம்பவ இடத்தை இன்று முதலமைச்சர் அமரேந்தர் சிங் பார்வையிட உள்ளார்.
