மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் வாரம் தோறும் சுமார் 14 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் உண்டியலில் சேர்வதால் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
நாட்டின் பணக்கார கோவில்களில் ஒன்றாக விளங்கி வரும் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையே பிரச்சனையாக மாறியுள்ளது. வாரம் இருமுறை எண்ணப்படும் கோவில் உண்டியல் பணத்தில், ஒவ்வொரு முறையும் சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் சேர்வதாகவும், அதாவது ஒரே வாரத்திலேயே 14 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் சேர்வதாகவும், கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையிலான நாணயங்களை வங்கிகளும் ஏற்க மறுப்பதால், அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து, தற்போது கோவில் நிர்வாகம் ரிசர்வ் வங்கியை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
