நிலக்கோட்டை, சித்தர்கள்நத்தம் பகுதி வைகை தடுப்பணையில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நிலக்கோட்டை ராமராஜபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ராமராஜபுரம், சித்தர்கள்நத்தம் பகுதி மக்கள், வைகை ஆற்று நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நம்பியுள்ள நிலையில் சித்தர்கள்நத்தம் பகுதியில் உள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள மணல் சட்டவிரோதமாக திருடப்படுவதாக கூறியிருந்தார்.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்கவேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிலக்கோட்டை சித்தர்கள்நத்தம் பகுதி வைகை ஆற்றுத் தடுப்பணையில் சட்டவிரோத மணல் திருட்டு தொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
