மும்பை: ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, 25 கோடி ரூபாய் வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் போன்றவற்றால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதன் காரணமாக, இத்துறை நிறுவனங்கள், வங்கிக் கடனை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிகள், தவணை செலுத்த தவறும் நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்த்து, திவால் சட்டத்தின் மூலம், கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அவற்றின் வாராக்கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற, சக்திகாந்த தாஸ், ஒரு முறை தீர்வாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், வாராக்கடன்களை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
