தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக கூறும் நிலையில், 12 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையால் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய நாளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோரி கடலூரைச் சேர்ந்த முருகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு பல்வேறு திட்டங்களுக்காக 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகவும், 12 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தமுள்ளவர்களை விட அதிக நபர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் அறிக்கை திருப்திகரமாக இல்லை எனக் கூறி, திருத்தப்பட்ட அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
