சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. எனவே அதுகுறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் புதியதாக 11 தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தள பரப்பளவு குறியீட்டினை 1.5 லிருந்து 2 ஆக உயர்த்த வரைவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கட்டட பாதுகாப்பை உறுதி செய்யவும், விதிமீறல்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அவற்றை தவிர்க்கும் வகையிலும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கட்டடம் மற்றும் மனைப் பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்த, தற்போது தனியாக உள்ள திட்ட அனுமதி மற்றும் கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டு இது தமிழக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையாக்கப்பட்டு விரைவில் அனுமதி அளிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வானூர்தி உதிரி பாகங்கள் உற்பத்திக்கான புதிய கொள்கைக்கு ஒப்புதல் மற்றும் சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு கொள்கைகளும் வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது
