வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை, மாவட்டப் பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில், நடிகர் சங்கத்தைச் சேந்த பாரதி பிரியன் என்பவர், தென் சென்னை மாவட்ட பதிவாளரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த தேர்தலில் தாம் வாக்களித்ததாகவும், ஆனால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
தன்னைப் போல் 61 பேர் நீக்கப்பட்டு இருப்பதாகக் கூறி அவர் மனு அளித்திருந்தார். இதற்கு நடிகர் சங்கம் அளித்திருந்த பதிலில், புகார் அளித்தவர்களிடம் இருந்து முழு தரவுகளை கேட்டதாகவும் அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே அவர்கள் உண்மையிலேயே உறுப்பினர்களா? இல்லையா? என்ற ஐயம் எழுவதாக நடிகர் சங்கத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக் காட்டியுள்ள தென் சென்னை மாவட்ட பதிவாளர், 62 பேரிடமும் விசாரணை செய்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த வருட உறுப்பினர் பட்டியலை அடிப்படையாக வைத்து தேர்தல் நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாகவும் பதிவாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல், சங்க நிர்வாகிகளின் பணிக் காலம் முடிந்த பிறகு அவர்களால் தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவின் நிலை குறித்தும் பரிசீலிக்க வேண்டி உள்ளதால், இதற்கு தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
WhatsApp us