வெப்பச் சலனம் காரணமாக விழுப்புரம், சேலம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்துள்ளது.
தொடர் மழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தேங்காய் பட்டிணம் குளச்சல் உட்பட மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இது 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பொழியும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
