சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு சில பகுதிகளில் பலத்த மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமாகியதால் கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிக்கிடக்கின்றன.
அதேநேரம் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் நீலகிரி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பல இடங்களி நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சில பகுதிகளிலும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை(இன்று) முதல் சனி(ஆக.17), ஞாயிறு ( ஆக.18) ஆகிய மூன்று நாள்கள் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்கள். வியாழக்கிழமை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 70 மில்லிமீட்டர் மழையும், திருத்தணி, திருவேலங்காடு, சோழவரம், அரக்கோணம் பகதியில் தலா 60 மில்லி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
