டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்ன வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளியாகும் வரை, இடைப்பட்ட காலத்தில் தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், கே.எம். ஜோசப் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. விதிகளின்படி பதிவு செய்யப்படாத, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் 24-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையத்தில் உள்ள ஒரு பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறியுள்ளது.
