கேரள மாநிலம் புனலூர் பகுதியில் கோட்டக்கல் கலைநாடு ஜீவா ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சென்றுவருகின்றனர்.
இந்நிலையில்,செங்கோட்டையில் இருந்து புனலூர் நோக்கி காரில் சென்ற விக்னேஷ் என்பவரை ஆரியங்காவில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் தேங்காய்களுக்கிடையே மறைத்து வைத்து 15 கிலோ அலோபதி மருந்து பொடிகள், ஐந்தரை கிலோ எடை கொண்ட காலி கேப்ஸுல்கள், ஏழரை கிலோ மருந்துகள் இருந்துள்ளன.
காரை ஓட்டி வந்த விக்னேஷை விசாரித்த போது, மருந்துகள் மற்றும் கேப்சூல்கள் புனலூர் கலைநாடு ஜீவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவமனைக்கு எதற்கு அலோபதி மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விக்னேஷிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
முறையாக பேக்கிங் செய்யப்படாமல் இருந்த அந்த மருந்துகள் எந்த ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறித்தும், எந்த நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதற்கும் எந்த ஆவணங்களும் விக்னேஷிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து திருவனந்தபுரம் சிறப்புப் பிரிவு அதிகாரியிடம் விக்னேஷ் ஒப்படைக்கப்பட்டார். ((GFX 1 out))
ஆயுர்வேத மருத்துவம் என்ற பெயரில் அலோபதி மருந்துகள் ஏன் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாகக் கூறிய அந்த அதிகாரி, ஆயுர்வேத மருத்துவத்துடன் அலோபதி மருந்துகளை சேர்த்து உட்கொண்டால் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற மருத்துவமனைகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு
