காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்க உள்ளது. இதில் காவிரியில் நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.,
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 புள்ளி 25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி இம்மாதத் தவணையாக 9 புள்ளி 19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பின்னர் வழமையாக கையை விரித்தது.
பருவமழை குறைவாக பெய்ததாலும், அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும் காரணம் கூறிய கர்நாடகா காவிரி நீரைத் திறந்துவிட மறுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்க உள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடக்க உள்ள இக்கூட்டத்தில் பங்கேற்க, தமிழக பொதுப்பணித்துறை செயலர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
மேலும் கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளும் டெல்லி சென்றுள்ளனர். இன்று நடக்கும் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை முறையாக வழங்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர்.
