தோசை மாவு வாங்கிய பிரச்னையில் கடைக்காரரை தாக்கியதாக கூறி எழுத்தாளர் ஜெயமோகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வணிகர் சங்க பேரவையினர் புகார் அளித்தனர்.
நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் வசிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன், அங்குள்ள கடையில் தோசை மாவு வாங்கியது தொடர்பாக, அவருக்கும், கடைக்காரருக்கும் சண்டை ஏற்பட்டது.
கெட்டுப்போன மாவை கொடுத்துவிட்டதாக திருப்பி அளிக்க சென்றபோது ஏற்பட்ட தகராறில், எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடைக்காரருக்கு ஆதரவாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில் செல்வத்தையும், அவரின் மனைவி கீதாவையும் தாக்கிய ஜெயமோகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஜெயமோகன் தாக்கியதில் காயமடைந்துவிட்டதாக கூறி, மளிகைக் கடைக்காரர் செல்வத்தின் மனைவி கீதா கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
