மதச்சுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஒருதலைபட்சமான குற்றச்சாட்டு என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ (Mike Pompeo), சர்வதேச மதச்சுதந்திர ஆண்டறிக்கை 2018ஐ வெளியிட்டார். அதில், இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுகள், மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், இஸ்லாமியர்கள், தலித்துகள் மீது கும்பல் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. கட்டாய மதமாற்றம் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில், சுதந்திரமான நீதித்துறை இருப்பதால், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும், அமெரிக்கா வெளியிட்டிருக்கும் சர்வதேச மதச்சுந்திர ஆண்டறிக்கை 2018ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கைக்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறது. பன்னாட்டு மதச்சுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைபட்சமானது என்று பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.
கும்பல் தாக்குதல் நடைபெற்று, அதில் பலர் உயிரிழந்திருப்பதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மறுத்திருக்கும் பாஜக, ஏதோ ஒரு பகுதியில், உள்ளூர்காரர்களுக்கு இடையிலான சச்சரவாலும், கிரிமினல் புத்திக் கொண்டவர்களாலுமே, தாக்குதல் நடைபெறுவதாகவும் பாஜக விளக்கமளித்திருக்கிறது.
அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது, வீண்பழி சுமத்தும் விதமாக, ஒருதலைபட்சமான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டிருப்பதாக, பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின், சர்வதேச மதச்சுதந்திர ஆண்டறிக்கைக்கு, இந்திய வெளியுறவுத்துறை, கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது. மதச்சார்பின்மையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதில், இந்தியா பெருமிதம் கொள்வதாக வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.
நீண்டகாலமாக, சகிப்புத்தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம், மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூக அந்தஸ்துடன் இந்தியா திகழ்கிறது என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
சிறுபான்மை சமூகத்தவர் உட்பட நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும், இந்திய அரசியலைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை வழங்கியிருக்கிறது என்றும் வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.
எனவே, இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்து மட்டுமல்ல, நாட்டின் குடிமகன்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பற்றியோ, எந்தவொரு நாடோ, நிறுவனமோ சான்றளிக்க தேவையில்லை என்றும், வெளியுறவுத்துறை கண்டிப்புடன் தெரிவித்திருக்கிறது.
