கோடிக்கணக்கான மக்களுக்கு இதுநாள் வரை வற்றாமலும் அள்ள அள்ள குறையாமலும் நீரை வழங்கி கொண்டிருக்கும் காவிரி தாய்க்கு சிலை அமைக்க போகிறார்கள்.350 அடியில் மாண்டியாவில் அமையவுள்ளது.
காவிரியின் ஆரம்பம் கர்நாடகா என்பதால் இந்த சிலையை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசுதான் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.
350 அடி உயரம் ; ரூ.1500 கோடி செலவில் உருவாகும் இந்த சிலையானது 125 அடி அகலம் மற்றும் 350 அடி உயரத்தில் நிறுவப்படும் என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் அமைக்கப்பட்டு, அந்த கண்ணாடி கோபுரம் வழியாக கிருஷ்ணராஜகர் அணையின் முழு தோற்றத்தையும் பார்வையிடும் வகையில் கட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பிரம்மாண்ட திட்டத்திற்காக பொது மற்றும் தனியார் அமைப்புகளின் பங்களிப்பையும் கர்நாடக கூட்டணி அரசு எதிர்நோக்கியுள்ளது. காவிரி தாய்க்கு இப்படி ஒரு சிலையை அமைத்துவிட்டால், அதன் மூலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்க முடியும் என்றும் கர்நாடக அரசு சார்பில் கூறப்படுகிறது.
