கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே நெற்பயிர்கள் திடீரென கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொள்ளிட கரையோரத்தில் அமைந்துள்ளது அத்திப்பட்டு ஆலம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், ஏற்கனவே 30 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த தண்ணீர் அதிக உப்பு தன்மையாக மாறியதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், 400 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்து நெற்பயிருக்கு நீர் பாய்ச்சினார். இந்நிலையில், நெற்பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன.
கொள்ளிடம் ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளாக அரசூர், குஞ்சமமேடு உள்ளிட்ட கிராமங்களில் அரசு மணல் குவாரிகளை அமைத்து அதிக ஆழத்தில் மணல் அள்ளியதால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு தன்மையாக மாறி விட்டதாகவும், இதனால் பயிர்கள் கருகுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல், குடிநீரும் உப்புத்தன்மையாக மாறி வருவதாக தெரிவித்தனர். இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
