ஜப்பான் நகரான ஒசாகாவில் ஜி 20 மாநாட்டுக்கு முன்பாக பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப்புடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி 20 மாநாடு ஜப்பானில் இன்று நடைபெறும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் மோடியின் மகத்தான தேர்தல் வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கினார். இந்த வெற்றிக்குத் தகுதியானவர்தான் நீங்கள் என்று மோடியிடம் டிரம்ப் தெரிவித்தார்.
மூன்று நாடுகளும் பொதுவான கருத்தியலை கொண்டிருப்பவை என்று கூறிய பிரதமர் மோடி, அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தமது அரசின் கொள்கை என்றார். ஜப்பான்-அமெரிக்கா- இந்தியாவை JAI என்றும் மோடி குறிப்பிட்டார்.
வர்த்தகம்-பாதுகாப்பு-தீவிரவாதம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த பேச்சவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மோடி-டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட உறுதிமொழிகள் கடைபிடிக்கப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் விவகாரம், 5 ஜி தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், வர்த்தக உறவுகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.
ஜி 20 மாநாடுகளின் தொடக்கத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா , சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கூடியது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் , சீன அதிபர் சீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனை போன்ற முக்கிய விவகாரங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உலக அளவில் நீடிக்கும் பாதுகாப்பு பிரச்சினைகளை சுட்டிக் காட்டினார்.
தீவிரவாதம் மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்றும் மோடி தமது உரையில் குறிப்பிட்டார். தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். பிரிக்ஸ் நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் மோடி கோரிக்கை விடுத்தார்.
WhatsApp us