மத்திய அரசிடம் நிதி கோரும் போது அதிகாரத்தோடும் தைரியத்தோடும் கேட்டால் தான் நிதி கிடைக்கும், நெளிவு சுழிவு காட்டினால் மத்திய அரசு பணியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை திமுக பொருளாளர் துரைமுருகன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நேரில் சென்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அரசுக்கு உறுதுணையாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வரை சந்தித்து கொடுத்ததாகவும், மேலும் திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என தலைவர் ஸ்டாலின் ஆணையை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருவதாக கூறினார்.
எதிர்கட்சிகள் மக்களை தூண்டி போராட்டம் நடத்துவதாக அமைச்சர்கள் கூறிய குற்றச்சாட்டை மறுத்த துரைமுருகன், அவ்வாறு குற்றசாட்டும் அமைச்சர்களுக்கு போதிய அனுபவமும் இல்லை, அரசியல் தெளிவும் இல்லை என கூறினார்.
கஜா புயலுக்காக நிதி கோர நாளை முதல்வர் டெல்லி செல்லவுள்ளதை பற்றி கூறிய அவர், மத்திய அரசிடம் நிதி கோரும் போது கேட்கிற விதத்தில் கேட்க வேண்டும், அதிகாரத்தோடும், தைரியத்தோடும் கேட்டால் தான் நிதி கிடைக்கும், அவர்களிடம் நெளிவு சுழிவு காட்டினால் மத்திய அரசு பணியாது என கூறினார்.
