விவசாயிகள் செலவு பிடிக்காத, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண்மை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வாழ்வதை எளிமையாக்குதல் என்பது விவசாயிகளுக்கும் பொருந்தும், தொழில் செய்வதை எளிமையாக்குதல் என்பது வேளாண் தொழிலுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த முறை புதியது அல்ல என்றும், ஆனால் இந்த முறையை பரவச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் இந்த முறையை ஏற்கெனவே முயற்சி செய்து, விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்த முடியும் என அவர் கூறினார். ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது, விலங்குகளின் சாணங்களை உரமாக பயன்படுத்தும் இயற்கைவழி விவசாயத்தின் ஒரு வடிவம். இந்த முறையில் ஊடுபயிர்கள் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும்.
குறைவான வெளித் தலையீட்டுடன், சுயமாக தாக்குப் பிடிக்கும் தோட்டப் பயிர் முறையாக இதை பின்பற்றலாம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தை சேர்ந்த சுபாஷ் பலேகர் ((Subhash Palekar)) 25 ஆண்டுகளுக்கு முன்னரே, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முன்னெடுத்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
